வியாழன், 20 செப்டம்பர், 2012

விநாயகர் சதுர்த்தி-நோக்கமும் தாக்கமும்

விநாயகர் சதுர்த்தி-நோக்கமும் தாக்கமும்

செக்கு மாடு போல் தினமும் 
உழன்று கொண்டிருக்கும் மனித வாழ்வில் 
மகிழ்ச்சியும் ஒரு புத்துணர்ச்சியும் 
ஏற்படுத்த தோன்றியதே விழாக்கள் 

முன்னோர்கள் விழாக்களை தோற்றுவித்த போதே
 அது சமுதாயத்திற்கு பலனளிக்கும் வகையில் 
அதை உருவாக்கி வைத்தார்கள். 

ஒவ்வொரு தொழில் செய்பவர்களின் வாழ்வில் ஒளியேற்ற 
பல பண்டிகைகளை தோற்றுவித்தார்கள் 
உதாரணமாக மண் பானை ,மண் சிலைகள், பொம்மைகள் 
அகல் விளக்குகளை செய்பவர்கள் வாழ்வு சிறக்க 
பொங்கல் பண்டிகை,கார்த்திகை தீபம்,நவராத்திரி கொலு 
போன்றவற்றை சொல்லலாம்  

காலபோக்கில் அதன் நோக்கம் மங்கி போயிற்று 
ஆனால் அதன் தாக்கம் இன்று 
அதன் நோக்கத்திற்கே எதிராக
போய்கொண்டிருக்கிறது.
அந்த வகையில் விநாயகர்
 சதுர்த்தி விழாவும் ஒன்று. 

முற்காலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா 
களிமண்ணால் செய்யப்பட விநாயகர் சிலைகளை 
கொண்டுதான் வீடுகளில் மட்டும் கொண்டாடப்பட்டது.
அதற்காக  குளம், குட்டைகள் , ஏரிகள், 
ஆறுகளிலிருந்து களிமண் 
சிலைகள் செய்வதற்காக தோண்டி எடுக்கப்பட்டு
மழை காலத்தில் தண்ணீர் அதிகம் தேக்க வழி வகை செய்யப்படும்.
மீண்டும் அந்த களிமண் சிலைகளை 
அந்த நீரில் போடும் போது தரை கெட்டியாகி 
தண்ணீர் பூமியில் உறிஞ்சப்படாமல் இருக்கும்
மக்களுக்கும், கால்நடைகளுக்கும், பயிர்களுக்கும் 
அடுத்த மழை காலம் வரும் வரை பயன்படும்.
கிணறுகளிலும் நீர் இருக்கும். . 

இன்று கிணறுகளும் குளங்களும் இல்லை,
 குட்டைகளும்  இல்லை, ஏரிகளும் இல்லை
கட்டைகளும், மட்டைகளும், பிளாஸ்டிக் குப்பைகளும்தான் நிரம்பி
சுகாதார கேடுகள் விளைவித்து கொண்டிருக்கின்றன 

மக்கள் தண்ணீருக்காக தாங்கள் சம்பாதிக்கும்
 வருவாயில் கணிசமான தொகை செலவழிக்க வேண்டிய 
கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு விட்டார்கள். 
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பாடாவிடில் 
எதிர்காலத்தில் நிலைமை இன்னும் 
மோசமாகத்தான் போகக்கூடும். 

இந்திய சுதந்திர போராட்டத்தின் போது போராட்டம் நடத்த 
ஆங்கிலேய அரசு தடை விதித்தால் மக்களை ஒன்றுபடுத்த
பால கங்காதர திலகரால் பொது இடங்களில்
விநாயகர் சதுர்த்தி விழாவின் பொது  சிலைகளை வைத்து 
விழாவாக கொண்டாடும் முறை ஏற்படுத்தப்பட்டது.
 
அது இப்போது பல்கி பெருகி இந்தியா முழுவதும் மிகவும் ஆடம்பரமாகவும் ஆர்பாட்டத்துடனும்  மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டு சிலைகள் ஏரிகளிலோ,நீர் இல்லாமல் சாக்கடைகள் ஓடும்  ஆறுகளிலோ, கடலிலோ ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது இல்லை கொட்டப்படுகிறது
.
தெய்வமென போற்றி மூன்று நாட்கள் அழகாக அலங்கரித்து பக்தியுடன் பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் சாக்கடைகளிலும் கடலிலும் பொறுப்பற்ற முறையில் கிரேன்களினால்   தூக்கி எறிவது உண்மை பக்தர்களின் மனதை நெருடும்  செயலாக உள்ளது. அவைகள் உடைந்தும் உடல்பகுதி பகுதியாய் பிரிந்தும் தண்ணீரில் மிதந்துகொண்டு பல நாட்கள் ஏன் பல மாதங்கள் கிடப்பதும் பார்க்க வருத்தமாக் உள்ளது. 

மனிதர்கள்தான் தனக்கு ஒருவர் வேண்டுமென்றால் தலைமீது தூக்கி வைத்து கொண்டு ஆடுவதும், வேண்டாமென்றால் அவர்கள் வெறுத்து ஒதுக்குவதும் செய்வர். இறை வடிவங்களுக்கும் அந்த கதி தான்போலும்.

ஏனென்றால் செய்யப்படும் சிலைகள் அனைத்தும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் பிளாஸ்டிக், ,பெயிண்ட் என அழியாத சுற்று சூழலுக்கு மாசு ஏற்ப்படும் வகையில் செய்யப்பட்டவை. 
ஒவ்வொரு ஆண்டும் அரசுகள் அனேக கட்டுபாடுகள் விதித்தாலும் மக்கள் அதை மதிக்காமல் சுற்றுபுறத்தை மாசு படுத்துவதில் சுருசுறுப்பாயிருக்கிரார்கள். 

மேலும் விழாவில் மக்களிடையே சமூக விரோதிகள் புகுந்துகொண்டு அடாவடித்தனமாக மக்களிடமிருந்து ஏராளமான பணம் வசூல் செய்வதும், அமைதியாய் வாழும் மக்களிடையே மோதல்களை உருவாக்கி பொது சொத்துக்களை சேதப்படுத்துவதும் ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகி கொண்டே வருகின்றன .இதனால் நாட்டில் ஒவ்வொரு விழாவின்போதும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டு நாட்டின் அமைதி குலைகிறது
விழாவினால் பல பொருட்களின் வியாபாரம் பெருகி மக்கள் நலம்  பெறும் வேளையில் சுற்று சூழலையும் பாதிக்காத வகையில் மக்கள் விழாக்களை கொண்டாடி மகிழ்ந்தால் அது அனைவருக்கும் நன்மை பயக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக